Thursday, December 17, 2009

இரண்டு இந்தியக் கவிதைகள் – மொழிபெயர்ப்பு
அய்யப்ப பணிக்கர்

நான்கு கம்பீரக் குதிரைகள்
பாய்ந்தோடிக் கொண்டிருந்தன

ஒன்று வெள்ளை நிறத்தது, ஒன்று கருப்பு
ஒன்று சிவப்பு, ஒன்று பழுப்பு

ஒன்றிற்கு நான்கு கால்கள்
ஒன்றிற்கு மூன்று
ஒன்றிற்கு இரண்டு
நான்காவதிற்கு ஒரு கால்

ஒற்றைக்கால் குதிரை சொன்னது:
இது நடனத்திற்கான நேரம்
இனிய நண்பர்களே
ஒற்றைக்காலில் நடனமிடுவோம்

அனைத்தும் ஒப்புக் கொண்டன
நடனம் துவங்கியது
நான்கு கால் குதிரை தளர்ந்து வெளியேறியது
மூன்று கால் குதிரை தடுமாறி விழுந்தது
இரண்டு கால் குதிரை நிலைகுலைந்து விழப்போனது
ஒற்றைகால் குதிரை மட்டுமே
நடனமாடிக்கொண்டிருக்கிறது. ஆடிக்கொண்டே இருக்கிறது.நாரயண ரெட்டி

நான் உனக்கொரு சமுத்திரத்தை தருவேன்

நான் உனக்கொரு சமுத்திரத்தை தருவேன்
அதை உடலெங்கும் போர்த்திக் கொள்
பிறகு பார்
அடி ஆழமற்ற சிந்தையாக நீ இருப்பாய்
மிகுந்த நம்பிக்கையாளனாகவும்

நான் உனக்கொரு சாலையை தருவேன்
அதை கால்களில் அணிந்து கொள்
பிறகு பார்
கோபத்தின் முஷ்டியாக நீ இருப்பாய்
பசி நோக்கி அணிவகுக்கும் ஒரு கூட்டமாகவும்

நான் உனக்கொரு வானத்தை தருவேன்
மடித்து அதை உன் தலைக்குள் செருகிக் கொள்
பிறகு பார்
கோள்கள் பூம் பூம் மாடென உன் இசைக்கு ஆடும்
விண்மீன்கள் வெண்ணைத் துண்டென உன் கைகளுக்கு வரும்

நான் உனக்கொரு கொடியை தருவேன்
விரித்து அதை உன் சுவாசத்தில் நிறைத்துக் கொள்
பிறகு பார்
கம்பங்கள் ஜோதியென ஊர்வலம் போகும்
குடிசைகள் குகைகளாக பிரதிபலிக்கும்


(கே.சச்சிதானந்தன் தொகுத்த ‘GESTURES’ Poetries of SAARC Countries என்ற நூலில் இருந்து தமிழாக்கம் இளங்கோ கிருஷ்ணன்)

Tuesday, December 1, 2009

கவிதைகள்


அதற்கே

ஒரே ஒரு மதுப்போத்தல்
அதற்கே நான் வந்தேன்

நகரெங்கும் படுகளம்
ஊரே பிணக் காடு
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

நிலமெங்கும் கொடுநாகம்
நீளும் வழி பாதாளம்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

குன்றெங்கும் எரிமலை
குறும்புதரில் கொள்ளிவாய்கள்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

கடலெங்கும் பேய் அலைகள்
கரையெல்லாம் முதலை
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

வனமெல்லாம் புலிக்கூட்டம்
மரந்தோறும் வேதாளம்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

வானெங்கும் விஷக்காற்று
திசையெல்லாம் மின்னல்
ஆனாலும் வந்தேன்

ஒரே ஒரு மதுப்போத்தல்
அதற்கே நான் வந்தேன்
காப்பி நதி

காப்பி நதியின்
கரையில்
அமைந்துள்ளது
உன் நகரம்
கரையெங்கும்
கிளைக்கும் தாவரங்கள்
காய்ந்தபின்
காப்பி நிறத்திற்கே
திரும்புகின்றன
காப்பி வாடை வீசும்
மனிதர் உதடுகளில்
உருள்வது
காப்பியின் மொழி
காப்பி வண்ண மண்ணில்
அனைத்தும்
காப்பியின் ரூபம்
சந்திர சூர்யர் ஒளியில்
காப்பியின் பிசுப்பு
மின்னலின் ருசியில்
காப்பியின் கசப்பு


காப்பி நதி குடிக்க வயிறு உண்டோ யயாதி
காப்பி நதி கடக்க தோணி உண்டோ யயாதி
காப்பி நதி கடந்தால் காலம் உண்டோ யயாதி
19ம் நாள் யுத்தம்

இரவு வெகுநேரம்
கதவு தட்டப்பட
திறந்தேன்
நின்றிருந்தது
என் பிரேதம்
இன்றைய யுத்தத்தின்
வரவு செலவு அறிக்கையை
விவாதிக்கத் துவங்கினோம்
இறுதியில் எஞ்சியிருந்தன
மாலை சூரியனும்
கொஞ்சம் கையெறி குண்டுகளும்
குற்றுயிரான நம்பிக்கையும்
சில முளைக்காத சொற்களும்
தீக்கிரையான நகரத்தில்
பிணங்களின் சென்செக்ஸ்
இன்று சரிந்திருந்தது
இன்றைய புகாரின் சூத்திரம்
என்ன என்றேன்
நமது திருவிழாக்களை
வழிப்பறி செய்யும்
ஆரலைக் கள்வர்கள்
என் மதுக்குடுவையை
பிடுங்கிக்கொண்டார்கள் என்றது
பிறகு யுத்தத்தின் முடிவைப் பற்றி
வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்
நான் இறக்கும் வரை